வங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் எங்கே?- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

Where is Rs 15 Lakh as Promised asks Rahul Gandhi to PM Modi

மக்களவை தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவை ஆவேசமாகப் விமர்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது

ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். எத்தனை பேருக்கு ரூ.15 லட்சத்தை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72,000 வழங்க முடிவு செய்துள்ளதாக உறுதியுடன் தெரிவித்தார். ஆண்டுக்கு ரூ.72,000 வீதம் 5 ஆண்டுகளில் வங்கி கணக்கில் ரூ.3,60,000 இருக்கும் என்றும், ஜாதி, மதம், மொழி வித்தியாசம் இன்றி அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என்று ராகுல் தெரிவித்தார். ஏழைகளுக்கு நிதி வழங்குவதன் மூலம் புதிய பொருளாதாரம் வளரும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.

வேலை வாய்ப்புகள் செய்து தரப்படும்

மேலும் திருப்பூர், காஞ்சிபுரம் நகரங்கள் மீண்டும் வளரும் என்றும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காலியாக உள்ள 24 லட்சம் பணிகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்த ராகுல், பஞ்சாயத்து அலுவலகங்களில் 10 லட்சம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். கஜா புயலால் காவிரி பாசன மாவட்டங்கள் அழிந்துள்ளதாக தெரிவித்த ராகுல், அதிமுக அரசு விவசாயிகளை அவமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

வேளாண்துறை மேம்படுத்தப்படும்

வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கையை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்யும் என்று உறுதியளித்தார். நெல்லுக்கு ஆதார விலை மற்றும் விளைபொருள் விலையை முன் கூட்டியே அறிவித்துவிடுவதாக தெரிவித்தார். தொழில் அதிபர்களுக்கு பணத்தை வங்கி மூலம் அளித்தது பாஜக அரசு என்றும், அவர்கள் நாட்டை விட்டு தப்பி விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டினார். விவசாயிகளை பாதுகாப்பது குறித்து புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என்று ராகுல் உறுதியளித்தார். வங்கி கடனை திரும்பி செலுத்தாத விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம் என்று ராகுல் உறுதியளித்தார்.