ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி

Chennai Super Kings beat Rajasthan Royals by 4 wickets

சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையே ஜெய்பூர் சவாய் மன்சிங் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரகானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் அடித்து ஆடினர். ஆனால் அதன்பின்னர் சென்னை அணியினர் துல்லியமாக பந்து வீசினர். ரகானே 14 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 23 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், ராகுல் திரிபாதி 10 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 78 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிறிது தாக்குப்பிடித்தார். அவர் 28 ரன்னில் அவுட்டானார். ரியான் பராக் 16 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 18 ரன்கள் அடித்தனர். இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பில் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் துவக்க வீரர் வாட்சன் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் குல்கர்னி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டிபிளசி 7 ரன்களில் உன்’கட் பந்தில் திருப்தியுடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். யாதவ் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ராய்டு 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டோக்ஸ் பந்தில் கோபாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் தோனி நிதானமாக விளையாடி 58 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் போல்ட் ஆனார். இறுதியில் ஒரு பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மிட்செல் சிக்ஸ் அடித்து வெற்றிக்கு உதவினார். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்களில் ஸ்டாக்ஸ் 2 விக்கெட்டையும், குல்கர்னி, உன்கந்த், ஆச்சர், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஐபிஎல் தொடரில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன.